0
கௌரவ ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் இன்று ஆரம்பம்.!!!
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் நெறிப்படுத்தலில் வடமாகாணத்தில் முதன்முறை இடம்பெறும் திருக்குறள் பெருவிழா 'தொட்டணைத்தூறும் மணற்கேணி'  என்னும் தலைப்பில் முல்லைத்தீவு ஊற்றுங்கரை சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் வடமாகாண கௌரவ ஆளுநர் தலைமையில் இன்று (23) ஆரம்பமானது.

வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இன்றைய நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் திருக்குறள் புத்தகம் மற்றும் திருக்குறள் ஸ்டிக்கர் என்பன வெளியிடப்பட்டதுடன்  நிகழ்வில் கௌரவ ஆளுநரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மாணவர்கள் இருவருக்கு திருக்குறள் படம் ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் உரையாற்றுகையில், முல்லை மாவட்டம் தண்ணீரை கடந்து குருதியிலே நடந்து தீயை கண்டு தீண்டாமையை கண்டு இன்னும் வாழமுடியும் என்று சொல்லும் மாபெரும் மாவட்டம்  ஆகும். நான்கு இராணுவங்கள் கடந்து சென்றும் எங்கள் வாழ்க்கையை யாரும் பறித்துக்கொள்ளமுடியாது என்று உலகிற்கு சொல்கின்ற மக்கள் இங்கு இருக்கின்றனர். அதனால் தான் ஜனாதிபதியை மூன்று முறை இந்த மண்ணிற்கு கொண்டுவந்துள்ளேன். முல்லையில் இருக்கும் வேதனையை வெளிப்படையாக சொல்லமுடியாவிட்டாலும் மிகவும் அறிந்தவர் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள். அதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு இருக்கின்றோம் என்றும் கௌரவ ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார்.

திருவள்ளுவரை பற்றி பல்கலைக்கழகம் அதிகளவில் ஆராயவேண்டும் அதுவே என் வேண்டுகோள்.  நான் அறிந்தவரையில் யாழ் பல்லைக்கழகத்தில் திருவள்ளுவரையோ திருக்குறளையோ பற்றி கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள் இன்றுவரை  யாரும் இல்லை. இது ஒரு மாபெரும் குறை. இந்த விழா முடியும் போது திருக்குறளுக்கான பாடநெறியை பல்கலைக்கழக ரீதியில் முன்வையுங்கள் இதுவே என் வேண்டுகோள். இந்த யோசனையை நான் ஆதரிக்க விரும்புகின்றேன். அதற்கான நிதியைக்கூட நான் தர முன்வருகின்றேன் என்று ஆளுநர் அவர்கள் சுட்டிக்காட்டினார். மேலும் நவம்பர் மாத இறுதியிலே நாங்கள் சர்வதேச தமிழ்தினம் கொண்டாட வேண்டும் என்ற விருப்பம் உண்டு என்றும் கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை வவுனியா (24) , மன்னார் (25), கிளிநொச்சி(26) , தென்மராட்சி (27) ,பருத்தித்துறை பிரதேச செயலகம் (28), இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியிலும் (29) இறுதி நாளான 30ஆம் திகதி யாழ் மாநகரசபை மண்டபத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top