0
கிழக்கிலும் சட்டத்தரணிகள் பணிபகிஸ்கரிப்பு.!!!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்களை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தக் கோரி  வடக்கு மாகாண சட்டத்தரணிகள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழக்கிலும் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தின் நீதிமன்ற சேவைகள் முடங்கியுள்ளது.
இப் புறக்கணிப்பில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள சட்டத்தரணிகள்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருது - கல்முனையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணிகள் கல்முனை நீதிமன்ற கட்டட தொகுதி முன்பாக கண்டன எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி ஸாரிக் காரியப்பர் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இப்  போராட்டத்தில் சட்டதரணிகள் கருத்து தெரிவிக்கையில் நீதி சகலருக்கும் சமமானதாக கிடைக்க வேண்டும் என்றும் சட்டதரணிகளுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது முல்லைதீவு நீராவியடியில் நீதிமன்ற கட்டளையினையும் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த சட்டத்தரணிகள், அச்சந்தர்ப்பத்தில் சட்டத்தரணிகள் இருவர் தாக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த தவறினால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த மதகுருவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டமையும் சட்டத்தரணிகள் மீது தாக்குதல் நடாத்தியமை தொடர்பிலுமே இவ் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.Post a Comment

 
Top