0
இன நல்லிணக்கத்திற்கு எதிரானதும் வன்மங்களையும் குரோதங்களையும்  மீளவும் வளர்க்கும் சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகவும் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் சம்பவம் அமைந்துள்ளது - டக்ளஸ் தேவானந்தா.!!!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகக் கேணியில் மறைந்த கொலம்பே மேதாலங்காதர தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட சம்பவமானது எமது மக்களது உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

 அத்துமீறிய இச்சம்பவமானது மிகவும் கண்டிக்கப்படவேண்டிய விடயமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய (24) தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கைத் தீவானது ஒரு சமயத்திற்கான நாடு அல்ல. அது மதசார்பற்ற நாடாகத்தான் இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.  இதை நாம் புதிய அரசியல் சீர்திருத்த வரைபிலும் வலியுறுத்தியிருகின்றோம்.

ஆனால் இலங்கைத் தீவை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பௌத்த நாடாக புதிய அரசியல் வரைபில் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் விளைவாகவே இன்று ஒரு மதத்தை மற்றைய மதம்  இழிவு செய்யும் நிகழ்வுகள் நடந்தேறக் காரணமாக அமைந்திருக்கின்றது.

நீராவியடிப் பிள்ளையார் கோவில் கேணியில் நிகழ்ந்த சட்டத்திற்கு முரணாக தகனம் செய்யப்பட்டமை இலங்கைத் தீவில் உருவாக்கப்படுவதாக கூறப்படும் இன நல்லிணக்கத்திற்கு எதிரானதும் வன்மங்களையும் குரோதங்களையும்  மீளவும் வளர்க்கும் சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகவும்  அமைந்துள்ளது.

சிறுபான்மை இன மத சமூகங்களின் மத, கலாச்சார உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியமாகும். நாம் கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரங்களில் இருந்தபோது இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கு இடமளித்திருக்கவில்லை என்பதுடன் அவ்வாறு சந்தர்ப்பங்கள் உருவாகாத வகையில் நாம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டிருந்தோம். அதுமட்டுமல்லாது நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்திருந்தால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கும் இடமளித்திருக்க மாட்டோம்.

அந்தவகையில் நீராவியடிப் பிள்ளையார் கோவில் கேணியில் நிகழ்ந்த சட்டமுரணான பூதவுடல் தகனம் நடைபெற்ற சம்பவத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது என்பதுடன் இது தொடர்பில் நாடாளுமன்றிலும் கேள்வி எழுப்பவுள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே ஏற்கனவே யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய வளாகத்திலும் இவ்வாறான சட்டமுரணான வகையில் தேரர் ஒருவரின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது என தெராவித்துள்ளார்.

Post a Comment

 
Top