0
அமெரிக்கா  ஏன்  கோத்தாவை தடுக்கவில்லை.? மு . திருநாவுக்கரசு.!!!

நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில்  கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி  வேட்ப்பாளராக போட்டியிடுவதற்கு அவரது அமெரிக்க குடியுரிமை தடையாக இருந்தது.  இந்நிலையில் அவர் தனது குடியுரிமையை அமெரிக்க அரசிடம்   ரத்துச்  செய்ய விண்ணப்பித்து அதன்படி தனது குடியுரிமையை ரத்து செய்துகொண்டார்.

சீன  சார்பாளரான  கோத்தபாயவை ஜனாதிபதியாக வரவிடாமல் தடுப்பதற்க்கேற்ற  வகையில்  அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யாமல் விடுவதற்கான  காரணங்கள் அமெரிக்காவுக்கு இருந்தன.  முதலாவதாக அமெரிக்க நீதிமன்றங்களில்  அவருக்கு எதிரான குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அத்துடன்   ஜனாதிபதித் தேர்தலில் நியமனப் பத்திரத்திரம்  தாக்கல் செய்வதற்கான  திகதியை தாண்டும் வகையில்  அவரது குடியுரிமை ரத்துக்கான விண்ணப்பத்தை  காலதாமதம் படுத்துவதற்க்கேற்ற  சிவப்பு நாடா தடைகள் நிர்வாக ஒழுங்கில்   இருப்பது இயல்பு .

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி ஓர் அப்பட்டமான  போர்க் குற்றவாளியாக கருதப்படும்  கோத்தபாய,  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பாக அவரது அமெரிக்க குடியுரிமையை  அமெரிக்க அரசு ரத்து செய்ததற்குப் பின்னால் அமெரிக்க அரசுக்கும் கோத்தபாயவுக்குமிடையே ஏதாவது இரகசிய உடன்படிக்கைகள் இருக்கலாம் என்ற ஊகங்கள் பெரிதாக எழுந்துள்ளன.

சீன சார்பு நிலையிலிருந்து கோத்தப்பா யாவை அமெரிக்க சார்பு நிலைக்கு திருப்புவது அனேகமாக சாத்தியப்பட முடியாது.  ""கம்பளி மூட்டையை பூசாரி கைவிட்டாலும் கம்பளி மூட்டையாக காட்சியளித்த கரடி பூசாரியை கைவிடாது"" என்பதற்கிணங்க சீனாவை கோத்தபாய கைவிட்டாலும் கோத்தபாயவை சீன றகன் கைவிடாது.  மேலும் சீன-  ராஜபக்ச குடும்ப அரசியல் உறவு இயற்கையான கூட்டைக் கொண்டது.

இந்துமாக்கடலில் இலங்கையின் கேந்திர அமைவிட முக்கியத்துவம் கருதி முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கடந்த சில ஆண்டுகளாக  இலங்கைக்கான அரசியல்  முக்கியத்துவம் அதிகம் சூடுபிடித்துள்ளது.  இந்நிலையில் அமெரிக்காவின் பார்வை இலங்கை மீது அதிகம் உன்னிப்பானதாக அமைந்திருக்கும்.  தரையில்   ஊரும்  எறும்பைக்கூடப் பார்க்கக்கூடிய  தனது கழுகுக் கண்கொண்ட புலனாய்வுப்  பார்வையை  இலங்கை மீது அமெரிக்கா முழுமையாக திருப்பி இருக்கும். இந்நிலையில்  நடைபெற இருக்கும் தேர்தல் பற்றிய கணிப்பீடு அமெரிக்காவின் கையில் துல்லியமாகக் காணப்படும்.

இங்கு  வெறுமனே  ஒரு கோத்தபாயவை மட்டும் பார்க்க முடியாது. ராஜபக்ச குடும்பம் முழுவதையுமே கணக்கிலெடுத்துக் கணிப்பீடு செய்ய வேண்டும்  என்ற உண்மை அமெரிக்காவுக்கு நூறு வீதம் புரியும். ஒரு கோத்தபாயவை தடுத்து நிறுத்தினாலும் ராஜபக்ச குடும்பத்தில் மேலும் நான்கு பலமான ஜனாதிபதி வேட்பாளர்கள் உண்டு. எனவே ஒரு கோத்தபாயவை தடுப்பதில் பயனில்லை.

ராஜபக்ச குடும்பத்தில் ஒரு மஹிந்த ராஜபக்ஷவை தவிர  திருமதி ஷிராணி மஹிந்த ராஜபக்ஷ , சமல் ராஜபக்ஷ,  பசில் ராஜபக்ச,  நாமல்  ராஜபக்ச   என குடும்பத்தின்  அரசியல் வாரிசுகளின் இந்த பட்டியல் நீள்கிறது.

சிங்கள மக்கள் மத்தியில்  பெரும் அச்சத்துக்கு உரியதாக காணப்பட்ட ,  30 ஆண்டுகளாய் சிங்களத் தலைவர்கள் யாராலும் வெல்லப்பட முடியாததாக காணப்பட்ட   தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வீழ்த்தியவர்கள் என்கின்ற  வெற்றி வீரர்களுக்கு உரிய மகுடம் ராஜபக்ச குடும்பத்தினருக்கு  சிங்கள  மக்கள் மத்தியில் பெரிதாக  உண்டு. அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும்  சிங்கள மக்கள் மத்தியில்  மஹிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை வாக்குகள்  கிடைத்தன என்பதும் கவனத்துக்குரியது.  இவற்றையெல்லாம் கவனத்தில் எடுக்க   அமெரிக்க நிர்வாகம் தவறாது.

மேலும் மஹிந்த ராஜபக்சவால் ஜனாதிபதித் தேர்தலில் சட்டப்படி போட்டியிட முடியாதேயானாலும்  அவர் தொடர்ந்தும் பெரும் தலைவராக விளங்குகிறார். அத்துடன் அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். மேலும் அவர் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பிரதமராகவும்  வரமுடியும்.

இப்பின்னணியில் கோத்தபாயவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதான எத்தகைய ஏற்பாடுகளும்  நடைமுறையில் பயனற்றவை.  இத்தகைய மிக எளிமையான உண்மையை மாபெரும் உலக வல்லரசான அமெரிக்காவால் புரிந்துகொள்ள முடியாமல்  இருக்க முடியும் என்று யாராவது கற்பனை செய்வது தவறு .

இன்னிலையில் கோத்தபாய சமர்ப்பித்திருந்த  அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கான அவரது விண்ணப்பத்தை தடுக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இருந்திருக்க மாட்டாது.

இதனை மேலும் விளக்கமாக பார்ப்போம். தமக்கு  வெற்றி வாய்ப்பிருப்பதாகக்  கருதி 1957ஆம் ஆண்டு நடக்கவிருந்த   நாடாளுமன்றத்திற்கான தேர்தல்களை  ஓர் ஆண்டு முன்கூட்டியே 1956ஆம் ஆண்டு   சேர்.  ஜோன் கொத்தலாவலை தலைமையிலான ஐதேக அரசாங்கம் நடத்தியது.  அப்போது அமெரிக்க  அறிஞரான    ஹவார்டு  றிகின்ஸ் (  Haward Wriggins)  அத்தேர்தலில் பற்றி முன்கூட்டியே துல்லியமாக கணிப்பு செய்திருந்தார்.

அதாவது நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியினர்  ஒற்றைத் தானத்திற்கு மேல் வெற்றிபெற முடியாது என்று  தெளிவாகக் கூறியிருந்தார்.  ஐக்கிய தேசியக் கட்சியினர்களின் கணிப்பையும் மீறி   றிகின்ஸ் கூறியவாறு   ஒற்றைத் தானமான   வெறும்  8   தொகுதிகளில்  மட்டுமே ஐதேக  வெற்றிபெற  முடிந்தது.  பின்நாட்களில் றிகின்ஸ்  இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றினார் என்பதும்  இங்கு  குறிப்பிடத்தக்கது.

மிக்கயல்  கொர்ப்பச்சேவ் ( Mikhail Gorbachev)  சோவியத் ஜனாதிபதியாக பதவிக்கு வருவதற்கு முன்னமே  அதாவது 1984ஆம் ஆண்டு  அமெரிக்க அறிஞரான  கென்னடி என்பவர்  பேர்லின் சுவர் தகரும் என்று   ஆறு ஆண்டுகளுக்கு முன்பே   எதிர்வு கூறினார்.  இத்தகைய பலமான அறிவியல் பாரம்பரியமும்   அறிவியற் பலமும்  அமெரிக்காவிற்கு உண்டு. எனவே இலங்கை விடயம் பற்றி அதிகம் விழிப்படைந்து இருக்கும் அமெரிக்காவால் இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்  பற்றிச் சரியாகக் கணிக்கக் கூடிய ஆளுமை உண்டு. இத்தகைய பின்னணியில் வைத்துத்தான்  கோத்தபாய பற்றிய அமெரிக்காவின் கணிப்பை புரிந்துகொள்ளவேண்டும்.

ராஜபக்ச குடும்பத்தில் இருந்து போர்க்குற்றவாளிகள் அல்லாத யாராவது ஜனாபதியாக பதவிக்கு வருவதை விடவும் போர்க்குற்றவாளியாக விரல் நீட்டப்படும் கோத்தபாய ஜனாதிபதியாக வந்தால் அவரை அவரது குடும்பியில் பிடிப்பது  அமெரிக்காவுக்கு  இலகுவாக அமையும்.

  இந்தவகையில் , அதுவும்  ஐதேகவின் வெற்றி வாய்ப்புக்கள்   பெரிதும் அரிதாக ஒரு  பின்னணியில் , பெரிதும்  பிரச்சனைக்குரிய   ஒருவரான கோத்தபாய ஜனாதிபதியாக   பதவிக்கு வருவது அமெரிக்காவின் தேவைக்கேற்ப  அவரையும் , இலங்கை அரசாங்கத்தையும்
இலகுவாக   கையாள முடியும்  என்ற கணிப்பீடு அமெரிக்காவுக்கு நிச்சயம் இருக்கும்.

ராஜபக்ச குடும்பம்  அமெரிக்காவின் கையை மீறி  நடக்குமிடத்து  போர்க்குற்ற விசாரணைகளின்  பேரால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் கோத்தபாயவை நிறுத்த  வாய்ப்புண்டு. ஏற்கனவே  யூகோஸ்லாவியாவியாவின் ஜனாதிபதியாக இருந்த   மிலோசேவிக்கை  இனப்படுகொலையின் பெயரால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் அமெரிக்கா நிறுத்தியதை   இங்கு  மனங்கொள்ளலாம்.

அமெரிக்கா தனது குடிமகன் எவரையும்  சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த ஒப்புக்கொள்ளாத  ஒரு  நாடு.  எனவே அமெரிக்க குடிமகனாக இருக்கக்கூடிய கோத்தபாயவைவிடவும் அமெரிக்க குடிமகனாக அல்லாத இலங்கை குடிமகனாக இருக்கக்கூடிய  கோத்தபாய   அமெரிக்காவுக்கு பலமே தவிர பலவீனம் அல்ல.

இதனை ஈழத்தமிழ் தரப்பு சரிவரப் புரிந்து கொண்டால்  இங்கு நிலைமைகளை  தமிழர் தமக்கு சாதகமாக கையாள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.   ஜனாதிபதி தேர்தலின் பின்பு மேற்குலகம் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக நடப்பதற்கான சர்வதேச சூழல் இதன் பின்னணியில் உண்டு. பகமை-  பகமை என்ற    பழகிப்போன தீங்கான,  பிழையான  அரசியல்  மனப்பாங்கை கடந்து சூழலை புத்திசாலித்தனமாக கையாளுதல் என்கின்ற சாதுரியம் மிக்க அரசியலை தமிழ் தலைவர்களும்  தமிழ் அறிஞர்களும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சிங்களத் தரப்பிடம் அரச   கட்டமைப்போடு கூடிய நீண்ட   மெருகான ராஜதந்திரி பாரம்பரியம் உண்டு.  சிங்களத் தலைவர்கள் அரசியலை முழுநேரத் தொழிலாகக் கொண்ட வாழ்க்கை முறையை உடையவர்கள் என்ற  வகையில் அவர்களிடம் அரசியலில் போதிய தந்திரங்கள் விருத்தி அடைந்துள்ளன.    அரச இயந்திர கட்டமைப்புக்கூடாக அவர்கள் மத்தியில்  அரசியல்  இராஜதந்திரத்தில் தொழில்சார் பணியாளர்களும் நிபுணர்களும்  காணப்படுவதால் அத்தகைய மூளைகளின் பங்களிப்பு  அரசியல் தலைவர்களை சென்றடைகின்றது. ஆதலினால் மூலோபாய ரீதியாக உலகளாவிய அரசியலையும்,  பிராந்திய அரசியலையும் , இனவழிப்புக்கான அரசியலையும்,   மற்றும் அரசியல் கட்டமைப்புகளையும் சிறப்புற அவர்களால் வடிவமைக்க முடியும்.

இத்தகைய பின்னணியில் பதவிக்கு வரும் அரசாங்கங்களும்  தலைவர்களும்  சர்வதேச அரசியலை நுணுக்கமாக புரிந்து கொண்டு நமது தேவைக்கேற்ப கையாளக்கூடிய அடிப்படையை கொண்டுள்ளனர்.  ஆனால் தமிழர் தரப்பில் இவையெல்லாம்   வெறுமையாகவே  உள்ளன.

ஆயுதப்போராட்ட கால சூழலில்   சேர். ஜோன் கொத்தலாவல டிபன்ஸ் பல்கலைக்கழகத்தை  நீண்ட நோக்குப் பார்வையுடன் அவர்கள் வடிவமைத்துள்ளார்கள்.  பாதுகாப்பு , வெளியுறவுக் கொள்கை , மூலோபாயக் கற்கைநெறிகள்  சார்ந்து அந்தப் பல்கலைக்கழகம் சிங்கள் அறிஞர்களை ப  உருவாக்கத் தொடங்கியுள்ளது.  இத்தகைய   பின்னணியில் சிங்கள ஆட்சியாளர்களிடம் ஒரு பலமான  அறிஞர் படை  (Intellectual Brigade)  காணப்படும்  சூழலில்  நெருக்கடி மிகுந்த சர்வதேச அரசியலை அவர்கள் சாதுரியமாக   கையாளக்கூடிய அடிப்படைகளை கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில் இவை வெறுமையாக காணப்படும் பின்னணியில்  மேற்படி புதிய  சர்வதேச அரசியற் சூழல்களை எல்லாம் புத்திபூர்வமாகவும் நுண்மான் நுழைபுலனுடனும்  நடைமுறைக்கு பொருத்தமாக  கையாள்வார்கள் என்று எண்ணுவது கடினம் .

காலத்துக்குப் பொருத்தமாக  சர்வதேச அரசியலையும்  , உள்நாட்டு அரசியலையும் கையாளவல்ல புதிய சிந்தனையும், புதிய பார்வையும் ,புதிய அணுகுமுறையும், இவை அனைத்துக்குமான ஒரு புதிய மனப்பாங்கும் , புதிய அரசியல் பண்பாடும்  இல்லாமல்  இத்தகைய புதிய சூழலை ஒருபோதும் கையாளவும் முடியாது வெற்றிக்கு வழி தேடவும் முடியாது.

புதிய சிந்தனையும் ,  பரந்த அரவணைப்பும், ஆக்கபூர்வ செயற் போக்கும்  இல்லையேல்  தமிழ் மக்கள் தமக்கான தேசியப் பெருமையை நிலைநாட்டவும்   முடியாது ;  வெற்றிக்கு வழிதேடவும் முடியாது ;  புதிது புதிதாக உருவாகக்கூடிய மேற்படி  சர்வதேச, உள்நாட்டு அரசியல் சூழல்களை கையாளவும் முடியாது.

Post a Comment

 
Top